
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. முதல் உலகக் கோப்பை ஹாக்கி 1971-ம் ஆண்டு நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இப்போட்டி முதலில் ஆடவருக்காக தொடங்கப்பட்டது. பின்னர் 1974 முதல் மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி தனியாகத் நடத்தப்பட்டது. சர்வதேச மகளிர் ஹாக்கி சங்க சம்மேளனம் இப்போட்டியை நடத்திவந்தது. தனித்தனியாக செயல்பட்டு வந்த ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சம்மேளனங்கள் 1981 முதல் சர்வதேச ஹாக்கி சம்மேளனமாக ஓரே அமைப்பாக செயல்படத் தொடங்கின.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்துவதற்கான யோசனையை 1969-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாக்கி ரசிகர் ஏர் மார்ஷல் நூர் கான் என்பவர் முன்வைத்தார். பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச ஹாக்கி சம்மேளன கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி 1971-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் நடைபெற்றது. (முதலில் பாகிஸ்தானில்தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய அரசியல் பகைமை காரணமாக வேறு நாட்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.) முதல் மூன்று உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் 2 ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்பட்டன. அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1978-ல் 4-வது உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. அதன் பிறகுதான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதல் உலகக் கோப்பை போட்டியில் மிகக் குறைந்த அளவாக 10 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இதுவரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டி 11 முறை நடத்தப்பட்டுள்ளது. 12-வது போட்டி இந்தியாவில் தில்லியில் வரும் 28-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. 1982-க்குப் பிறகு இரண்டாவது முறையாக இப்போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது.
Thanks to தினமலர்.
Download As PDF
Thanks to தினமலர்.
No comments:
Post a Comment