“இதோ வருகிறார்.... இதோ வருகிறார்... கடவுள் வருகிறார்.......” என்று துடிக்கத் துடிக்க பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர், ஒருசாரார்.
‘இதோ சாமி வந்து ஆடப் போகுது’ என்று மேளதாளத்தோடு அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்தனர். இன்னொரு சாரார்.
இரு தரப்பு கோரிக்கைகளை யும் ஏற்றுக்கொண்டு கடவுள் அவர்கள் முன்னே தோன்றினார். அழைத்தவர்கள் வீடுகளுக் கெல்லாம் சென்றார்.
அவர்களது வீடுகளின் முன்னால் நின்று கொண்டிருந்த பழைய கார்களை பார்த்தார். ‘அவைகளை கொடுத்து விடுங்கள். புதியது தருகிறேன்’ என்றார். அவர்கள் பழையதைக் கொடுத்தார்கள். இவர், புதியது கொடுத்தார்.
அடுத்து ‘பழைய டி.வி.களைக் கொடுங்கள். புதியது தருகிறேன்’ என்றார். புதியது கொடுத்தார். இப்படி வீட்டில் இருந்த பழைய பொருட்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு, அதைவிட அற்புதமான புதிய பொருட்களை உருவாக்கிக் கொடுத்துக்கொண்டே வந்தார். எல்லோரும் ‘கடவுளுக்கு ஜே...’ போட்டார்கள்.
அடுத்து அவர் 60 வயதைக் கடந்து தளர்ந்த உடல், மூப்பு, கவலையுடன் காணப்பட்ட மனிதர்களை எல்லாம் தன்னிடம் அழைத்தார். எல்லோரும் ஓடோடி வந்தார்கள். ‘பழைய பொருட்கள் எல்லாவற்றையும் கேட்டேன். உடனே கொடுத்தீர்கள். அவைகளை அழித்துவிட்டு புதியது தந்தேன். முதுமை, நோய்த் தொந்தரவுடன் பழையதாகிப்போன உங்கள் பழைய உடலையும் கொடுத்து விடுங்கள். அழித்துவிட்டு புதிய உடல் தருகிறேன்’ என்றார்.
‘அதற்காக நாங்கள் முதலில் இறக்கவேண்டுமா?’ என்று திகிலுடன் முதியவர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் ‘ஆமாம்’ என்றார். அவ்வளவுதான் 16 வயதுக்குரிய வேகத்தில் முதியவர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். கடவுள், ‘மனிதர்கள் இன்னும் பக்குவப்படவில்லை’ என்று கருத்து தெரிவித்துவிட்டு மறைந்துவிட்டார். இது சிந்திக்கத் தூண்டும் ஒரு கற்பனைதான்!
முதுமையில் மனிதன் உடல் மூலம் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறான். மூப்பால் அவன் உடல் பழையதாகிப் போகிறது. அப்படியே தளரும் உடல், அழிவது மரணத்தின் மூலம்தான் என்பதை அறியும்போதே மனிதன் மரண பயத்தில் துடித்துப் போகிறான்.
மரணத்தை, மனிதர்கள் பயத்துடன் வெறுக்க, வெறுக்க அது பற்றிய சிந்தனை அவர்களை சிறைப்படுத்துகிறது. அதில் விழிப்புணர்வுகொண்டு, நட்போடு அணுகி ‘வரும்போது வா... ஏற்றுக்கொள்கிறேன்’ என்று நேசிக்கத் தொடங்கிவிட்டால், நம்மை சிறைப் பிடிக்கும் தைரியம் மரணத்திற்கு கிடையாது. மட்டுமின்றி பயத்தால் மரணத்தை தள்ளிப்போடவும் முடியாது.
எல்லோரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றிருப்பீர்கள். அப்போது,
ஆஸ்பத்திரி படுக்கையில் அடித்துப்போட்டது போல், வெள்ளைப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருப்பீர்கள்.
கண்களில் கவலை அப்பி இருக்கும்.
எவ்வளவோ வேலை இருந்தது. நான் போட்டுவைத்திருந்த பிளான் எல்லாமே தலைகீழாக மாறி ஜெயிலில் அடைச்சிப் போட்டது மாதிரி இருக்குது.... என்றெல்லாம் புலம்பியிருப்பீர்கள்.
இந்த புலம்பலுக்கு என்ன காரணம்?
அன்றாட வாழ்க்கையில் இருந்து சில நட்களுக்கு சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் நம்மால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
காலையில் அரக்க பரக்க எழுந்திருப்பது, குளிப்பது, கிடைத்ததை சாப்பிடுவது பஸ்சையோ, ரெயிலையோ பிடித்து வேலைக்குச் செல்வது வருடக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கும் அதேவேலையை தொடர்ந்து பார்ப்பது! இடையில் டீ நேரம் அரட்டை நேரம், சினிமா பேச்சு...! இது உங்கள் தினசரி வாழ்க்கை. உண்மையில் இந்த செக்குமாடு வாழ்க்கை உங்களுக்கு அலுப்பை தந்திருக்கும். என்னடா வாழ்க்கை இது என்று அவ்வப்போது புலம்பியிருப்பீர்கள். அந்த தினசரி நடைமுறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு நீங்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதாகிவிடுகிறது.
வழக்கமான சாப்பாட்டிற்குப் பதில் பத்தியச் சாப்பாடு. இது வித்தியாசம்தானே!
வேலைக்குப் போகும் கணவரும், மனைவியும் சந்திப்பதும், பேசுவதும் அபூர்வம். இப்போது நோய்வாய்ப்பட்டு விட்டதால் மனைவி லீவு போட்டு விட்டு உடனிருக்கிறார். நிறைய பேசலாம். இது வரவேற்கத் தகுந்ததுதானே!
அந்த நண்பனை பார்க்க வாய்ப்பில்லை. இந்த நண்பனை பார்க்க நோமில்லை என்று வருத்தப்பட்டிருப்பீர்கள். அவர்கள் கேள்விப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து உங்களை பார்த்துவிட்டுப் போவார்கள். இது நட்புக்கு நலந்தானே!
காலையில் போய் இரவு வரை தினமும் வேலை பார்க்கிaர்கள். சோர்ந்து போகும் உடலுக்கு தேவையான தூக்கம் இருக்காது. அந்த நாட்களில் படுக்கையில் நீண்ட நேடும் நேரம் தூங்கலாம்தானே!
இப்படி ஆஸ்பத்திரியில் இருக்கும் நாட்களில் பல்வேறு சாதகமான சூழல்கள் இருந்தாலும், ஆஸ்பத்திரி வாழ்க்கையில் மனம் லயிப்பதில்லை. அங்கிருந்து கொண்டு வீட்டை நினைப்பீர்கள். அங்கிருந்து கொண்டு அலுவலகத்தை நினைப்பீர்கள்.
இருக்கும் இடத்திற்கு தக்கபடி தன்னை மாற்றிக்கொண்டு எந்த மனிதனால் வாழ முடிகிறதோ, அவனுக்கு எல்லா இடமும் ஒன்று தான். அவனுக்கு எல்லா வாழ்க்கையும் இனிமைதான். இருக்கிற இடத்திற்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொண்டு வாழத் தெரியாதவர்கள், ஆஸ்பத்திரியிலும் புலம்புவார்கள். அலுவலகத்திலும் புலம்புவார்கள். வீட்டில் இருந்து கொண்டும் புலம்புவார்கள். இருக்கும் இடத்தில் இருக்கும் நேரத்தில் கிடைப்பதை அனுபவிக்காமல் விட்டு விட்டு, அடுத்த இடத்தில் இருப்பதை நினைத்தே ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
ஆஸ்பத்திரியில் போய் பாருங்கள் சாதாரண நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகத்தில்கூட பயம் இருக்கும். அது விழிகளில் தெரியும். உதடுகளில் தெரியும். ஆண்கள் என்றால் முகத்தில் முளைத்துக்கிடக்கும் முடிகளிலும் தெரியும். ‘வீட்டில் இருந்து வந்தேன். ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறேன். அப்படியே இடுகாட்டிற்கு போய்விடுவேனோ....?’ என்ற கேள்வி கலந்த அச்சம் பெரும்பாலானவர்களை ஆக்கிரமித்திருப்பதுதான், ஆஸ்பத்திரி பயத்திற்கு அடிப்படை காரணம்.
ஆஸ்பத்திரிகள் வாழ்க்கையின் அடுத்த கட்ட நிஜங்களை உணர்த்தும் அனுபவ பெட்டகங்கள். குடும்பத்தில் இருந்து உங்களை கொஞ்சமாய் பிரித்து ஆஸ்பத்திரிகள் உங்கள் மனநிலையை ஆழம் பார்க்கும்.
நான்தான் இந்த குடும்பத்தின் வேர். நான் இல்லாவிட்டால் என் குடும்பம் இயங்காது.
நான் இன்றி அவள் இல்லை, எனக்காக உயிரையே விட்டுவிடுவாள்.
கோடி ரூபாய் புராஜெக்ட்டுக்காக நான் கட்டாயம் இருந்தாக வேண்டும்.
நான் இல்லாவிட்டால் எங்கள் அலுவலகமே ஸ்தம்பித்துவிடும்.
என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அதெல்லாம் அறியமை. நீங்கள் இல்லாவிட்டாலும் எல்லாமே நடக்கும். எதுவும் உங்களுக்காக காத்துக்கிடப்பதில்லை. ‘நான் இல்லாவிட்டால் என்ன ஆகுமோ?’ என்று நீங்கள் நினைப்பது ஒரு பிரமை. மரணமும் அப்படித்தான். நீங்கள் மரணித்துவிட்டால் எதுவுமே ஸ்தம்பித்துவிடாது என்பதை ஆஸ்பத்திரிகள் சில நாட்கள் உங்களை பிரித்துவைத்து ஆழமாய் உங்களுக்குப்புரிய வைக்கும்.
ஆஸ்பத்திரிகள் உடலின் உண்மைகளையும் உணர்த்துகின்றன.
அங்கே உன் வலி, அதை நீதான் அனுபவிக்க வேண்டும். ‘என் உயிர் நீதானே’ என்று நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருந்தாலும் அவர் வந்து உங்கள் வலியில் பாதியை வாங்கிக் கொள்ள முடியாது.
அரசு ஆஸ்பத்திரியையும் தனியார் ஆஸ்பத்திரியையும் பணம்தான் பிரிக்கிறது. அப்படியானால் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் செல்வந்தர்களுக்கு பயமே இருக்காதா? இருக்கும். பயம் என்பது பணத்தைப் பொறுத்தது அல்ல, ஆஸ்பத்திரியைப் பொறுத்ததும் இல்லை. தனிமனிதனின் ஆளுமையைப் பொறுத்தது.
பணம் உயிரைக் காப்பாற்றி விடும் என்பது தவறான நம்பிக்கை. கடை ஒன்றை நடத்தி வரும் முதலாளி, தன் தொழிலாளிக்கு தினமும் 100 ரூபாய் சம்பளம் வழங்கிவந்தார். அந்த தொழிலாளிக்கு குடிப்பழக்கம் உண்டு. பத்து நாட்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பிய முதலாளி, அந்த தொழிலாளியை அழைத்து ‘இதோ உனக்கு இன்ப அதிர்ச்சி தரப்போகிறேன். இதுவரை நான் ஊருக்கு செல்லும்போது பணம் எதுவும் உனக்குத் தருவதில்லை. இன்று ஆயிரம் ரூபாய் தருகிறேன். நான் ஊர் திரும்பியதும் முதல் வேலையாக உன் வீட்டிற்குதான் வருவேன். இந்த ஆயிரம் ரூபாய் உன் வீட்டில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று பார்ப்பேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஊருக்கு போய்விட்டுத் திரும்பிய முதலாளி, நேராக அந்த தொழிலாளியின் வீட்டிற்கு சென்றார். அந்த வீடே சோகமாகிக் கிடந்தது. தொழிலாளியின் மனைவி இறந்து போயிருந்தார். தொழிலாளியை எங்கே என்று கேட்டபோது ஜெயிலில் போய் பாருங்கள் என்றார்கள்.
ஜெயிலில் போய் அந்த தொழிலாளியை சந்தித்து என்ன நடந்தது? என்று கேட்டதும், அந்த அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்.
நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்ததை உற்சாகமாகக் கொண்டாட மதுக்கடைக்கு சென்றேன். வழக்கமாக அளவோடு குடிக்கும் நான் அன்று நீங்கள் அதிக பணம் கொடுத்ததால் அளவுக்கு மீறி குடித்தேன். போதையோடு வீட்டிற்கு சென்றேன். மனைவி தட்டிக்கோட்டாள். உடனே நான் அடித்தேன். அடி பலமாக விழுந்ததில் அவள் இறந்து போனாள். என் குழந்தை மட்டும் இப்போது வீட்டில் தனிமையில் தவிக்கிறது. நீங்கள் ஆயிரம் ரூபாய் தந்ததுதான், இவை எல்லாவற்றிற்கும் காரணம்’ என்றார்.
பணம் எப்படிப்பட்டது? அது புனிதமானதல்ல. புதிரானது. பணத்தை சேர்த்துவைத்திருக்கும் பலர் அதை காப்பாற்றுவதற்கு திட்டமிடுவதிலே தன் நிம்மதியை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். தன் உடலையும், மனதையும் வருத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பணம் இருப்பது நல்லது என்பது தவறாகி, சில நேரங்களில் இழப்பது நல்லதாகிவிடுகிறது. தனது பணம் பத்து ரூபாய் கீழே விழுந்தால், அது தனக்குரியது என்று கேட்டு வாங்கிக் கொள்ளும் மனிதர்கள் அரச அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு பொலிஸார் சோதனை செய்யும்போது ‘அது தனக்குரிய பணமல்ல..’ என்று அள்ளி வெளியே வீசிவிட்டு அடுத்தவர்களுக்குரியது என்ற ‘உண்மையை’ ஒத்துக்கொள்கி றார்கள். வாழ்க்கைக்கு பணம் தேவை. ஆனால் பணமே வாழ்க்கை என்று வாழ்பவர்களின் வாழ்க்கையை அது புரட்டிப் போட்டு சின்னாபின்னமாக்கி விடுகிறது. பணம் அந்தஸ்தை உருவாக்கும் கருவி அல்ல. அது பலர் தங்கள் அந்தஸ்தை இழந்து அவமானப் பட காரணமாக இருக்கிறது. உண்மையை சொன்னால், மரணத்தை பயத்தோடு பார்ப்பவர்களும் பணத்தை பயத்தோடு கையாளுகிறவர்களும், வாழ்க்கையை ரசிக்க மறந்துவிடுகிறார்கள்.
Download As PDF
No comments:
Post a Comment