Ads

exclusivemails.net

Saturday, February 27, 2010

விரதம் தரும் பலன்


பாபத்தினால் உண்டான பிணியை தலைதூக்கவிடாமல் செய்வதற்கு நோன்பு முறைகள் பலவற்றை தந்திருக்கிறது தர்மசாஸ்திரம். நாள், திதி, நட்சத்திரம் முதலானவற்றை மையமாக வைத்து, கிருத்திகை, ஏகாதசி, சஷ்டி என்பன போன்ற விரதங்களை பரிந்துரைத்தது.

உணவுக் கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் இருத்தி வழிபட, பாபம் அகலும் சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு விரதமே வேள்விக்குச் சமம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி நோன்பு, காரடையான் நோன்பு, துளசி பூஜை, பஞ்சாட்சர ஜபம் முதலானவை ஒட்டிக் கொண்டிருக்கும் பாபங்களைத் துடைக்க வல்லது.

பிணியின் உச்சகட்டம் தான் பாவத்தின் அடையாளம் தற்கால சூழலில், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் ஏராளம். பாபம் கண்ணுக்குப் புலப்படாது. ஆனால் நோயைக் கொண்டு பாபத்தை அறிய முடியும். பாபம் இருந்தாலும் இல்லாது போனாலும் விரதங்களை மேற்கொள்வது புத்திசாலித்தனம்.

இருந்தால்............. பாபம் விலகிப் போகும்; இல்லையா? இரட்டிப்பு புண்ணியம் தானே, இதனால் தான், பன்னிரண்டு மாதத்தில் உள்ள விரதங்களை கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். தினமும் நீராடி, கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தால் போதுமா? இதில் மன நிறைவு ஏற்படலாம். பாபம் போகாது. இதற்கு விரதங்களே வழிகாட்டுகின்றன.

விரதங்கள் அனைத்துமே புராணங்களில் உண்டு. விரதம் இருந்து தான் கணவனை மீட்டாள் சாவித்திரி. விரதம் மேற்கொண்டு தான் ஆதிசங்கரரைப் பெற்றெடுத்தனர் அவரின் பெற்றோர். பணிவிடையின் பலனாக குந்திதேவிக்கு குழந்தைகள் கிடைத்தனர். ராமரைப் பிரிந்த சீதை, அசோகவனத்தில் விரதமிருந்தாள். ராமருடன் சேர்ந்தாள். தவம் இருந்தே ஈசனை அடைந்தாள் பார்வதிதேவி.

வேதக் கல்வியால் கிடைக்கும் அத்தனை வளமும் நலனும் விரதத்தால் கிடைக்கும் என்கிறது புராணம். தை மாத சூரிய வழிபாடு, மாசி சந்திர வழிபாடு, பங்குனி ராம நவமி, சித்திரை சித்ரபுத்திர வழிபாடு, வைகாசியில் வைகாசி விசாகம். என பண்டிகையும் விரதமுமாக கலந்து தருகிறது புராணம்.

இன்றைய தலைமுறையினருக்கு உணவுக் கட்டுப்பாடு என்பதே கசக்கிறது. விரதத்தால் பாபமும் விலகும். உடலில் பிணியும் அண்டாது. தவிர தெய்வ சிந்தனையும் இருக்க....... முழுப் பலனும் உறுதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் பேதி மருந்து சாப்பிடுவதும் வழக்கொழிந்துவிட்ட இன்னாளில், விரதங்களே பாதுகாப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

உணவிலும் சிந்தனையிலும் மாறுபாடு ஏற்பட மனமே காரணம். பாபங்கள் மனத்தின் வழியே செயல்படுபவை. விரதங்களில் உடலும் உள்ளமும் தூய்மையுறும். எனவே இளமையில் விரதம் மேற்கொள்வது நீண்ட ஆயுளுக்கான அஸ்திவாரம். யோகா, உடற் பயிற்சி போன்றவை தரும் பலனை விரதங்கள் தரவல்லவை. தவிர, மன அமைதியும் தருகிறது விரதம்.

வேதம் ஓதுவோர், மன்னர்கள், வணிகர்கள், உழைப்பாளிகள் முதலானோர் விரதத்தையே நம்பினார்கள். ஆரோக்கியமான உடல் தேவை தான்?! இதற்கு விரதமே சிறந்த வழி!

அத்ரி முனிவரின் புதல்வி அபாலா, கேட்டதை அப்படியே மனதில் பதிய வைக்கும் திறன் கொண்டவள். அத்ரி முனிவர், தன் சீடர்களுக்கு உபதேசிக்கும் போது, அவற்றை போகிற போக்கில் கேட்டவள், தத்துவ விளக்கங்களை உள்வாங்கினாள்; மகா மேதாவி என பேரெடுத்தாள். ஆனாலும் இவளிடம் உள்ள ஒரே குறை............. கர்மவினையால் இவளைப் பீடித்திருந்த தோல் நோய்.

இதனால் உரிய வயது வந்ததும் திருமணம் நடைபெறவில்லை. மணப்பதற்கு எவரும் முன்வரவில்லை. இந்தக் கவலையில் தவிர்த்தார் அத்ரி முனிவர்.

மனிதனிடம் முழுமையைக் காண்பது அரிது. புகழ், பெருமை, செல்வாக்கு என உள்ளவர்களிடம் கூட ஏதேனும் குறை ஒன்று தென்படும். ஏழ்மை, குழந்தையின்மை, ஆயுள் என ஏதேனும் குறை இருக்கும் என்கிறது தர்மசாஸ்திரம்.

மகளின் தோல் வியாதியைப் போக்க முடியாமல் கலங்கித் தவித்தார் முனிவர். ஒரு நாள்....... கிருசாச்வர் எனும் ரிஷி. இவரின் ஆஸ்ரமத்துக்கு வந்தார். பணி விடையில் மகிழ்ந்தவர், அபாலாவை திருமணம் செய்ய முன்வந்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்து போன அத்ரி முனிவர், திருமணத்துக்கு திகதி குறித்தார்.

ஆனால், வாக்கு கொடுத்த கிருசாச்வரின் சிந்தனை மாறிப் போனது. “உடல் நலம் இல்லாதவளுடன் சேர்ந்து அறத்தை நடைமுறைப்படுத்துவது இயலாத காரியம். ஆகவே ஆரோக்கியமானவளை ஏற்க வேண்டும்” என்கிறது சாஸ்திரம். மாறாக அவளை ஏற்றால், அறமும் தாம்பத்தியமும் அறவே அற்றுவிடும்.

அத்ரி முனிவரது மகிழ்ச்சிக்காக தியாகம் செய்வது சரியல்ல என எண்ணிய கிருசாச்வர், வாக்குறுதியை மீறினார். “துன்பப்படுபவரைக் கண்டு அனுதாபம் ஏற்படலாம். அதற்காக குறிக்கோள் இன்றி துன்பச் சுமையை ஏற்பது சரியல்ல. இதனால் அனுதாபத்துக்கு உரியவரின் துன்பம் விடுபடாது. பயனற்ற தியாகம் இது!” எனும் கோணத்தில் செயல்பட்டார் திருசாச்வர்.

இதைப் புரிந்துகொண்ட அத்ரி முனிவர், கோபப்படவில்லை. கிருசாச்வரை திட்டவுமில்லை. என் மகளிடம் உள்ள அன்பும் பாசமும் என்னை தவறு செய்யத் தூண்டியது. நல்ல வேளை....... கிருசாச்வர் காப்பாற்றி விட்டார்” என்று நிம்மதி கொண்டார்.

பெண்ணுக்குப் பாதுகாப்பானவன் தந்தை. இந்த காக்கும் சுமையை பிறரிடம் சுமத்தி தப்பிப்பது அழகல்ல. மகளுக்காக மற்றவரின் வாழ்க்கையை நிர்ப்பந்தப்படுத்துவது அறத்துக்குப் புறம்பானது. எனும் சாஸ்திர நுணுக்கத்தை நன்றாகவே அறிந்திருந்தார் அத்ரி முனிவர். எனவே வாக்கு மீறியதை இயல்பாக எடுத்துக் கொண்டார்.

தாறுமாறான உணவு, தவறாக சிந்த¨னை ஆகியன தரும் பிணியை மருந்தால் அகற்ற இயலும். கர்ம வினையால் உண்டான பிணியை அகற்ற மருந்து உதவாது. முற் பிறவியில் செய்த தவறுகள், இப்போது பிணி வடிவில் தோன்றும். இதைப் போக்க, பரிகார சாந்தி, மருந்து, கொடை, தவம், ஜபம், வேள்வி மற்றும் தேவர்களை வணங்குதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.

செய்த பாவம், உடல் உறுப்புகளையும் மனதையும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு துயரப்படுத்தும் என அறிவுறுத்துகிறது வேதம். நோய்க்கான காரணங்களை அலசி ஆராயும் போது, முற்பிறவியிலான பாவத்தையும் ஆராய வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.

மகள் அபாலா பிறக்கும் போதே தென்பட்ட நோய் என்பதால், முற்பிறவி பாவம் எனும் முடிவுக்கு வந்தார் அத்ரி முனிவர்: மகளை தவம் செய்யச் சொல்லி வலியுறுத்தினார். அபாலாவும் இந்திரனை வேண்டி தவம் இருந்தாள். ஒரு ?!{, ஆற்றில் இறங்கிய அபாலா, நீரில் மிதந்து வந்த சோமலதை கொடியை எடுத்து பல்லால் கடித்தாள்; சாறை சாப்பிட்டாள்; இந்திரனை எண்ணி தவம் இருந்ததால், சோமரசத்தை ஏற்றதும் அவளுக்கு எதிரே தோன்றினான் இந்திரன்.

விவரம் மொத்தமும் சொன்னாள். மனம் இரங்கிய இந்திரன், தன்னுடைய தேரின் நுகத்தடி ஓட்டை வழியே அவளை உள்ளிழுத்து, அவளிடம் ஒட்டியிருந்த பாபத்தை விலக்கினான். உடனே அழகு மங்கையாகக் காட்சி தந்தாள் அபாலா: மகிழ்ச்சியான வாழ்க்கையும் பெற்றாள்: இப்படி ஒரு கதை உண்டு.

யாகம் வளர்த்து அதில் இந்திரனுக்கு உணவளித்தால், உலக நலன் மற்றும் தன்னுடைய விருப்பம் ஆகியவற்றை அடையலாம் என்கிறது வேதம். இந்த யாகத்துக்கும், ஆண்களுக்கும் தொடர்பு உண்டாம்! வேத சட்ட திட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டுமாம்! இதில் இம்மியளவு தவறு நேர்ந்தாலும் வேள்வியின் பயன் வேறு விதமாக மாறிப் போகும் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம்.

தவம், வேள்வி, பிரார்த்தனை ஆகியவற்றால் மட்டுமே விருப்பத்தை அடையாளம் எனும் நிலையில், பெண்களுக்கும் இடம் அளித்துள்ளது வேதம். இந்திரனுக்குப் பிரியமானது சோமரசம்: இது, இமயமலையில் தென்படும் கொடி இனம். இதை கசக்கிப் பிழிந்தால் சாறு கிடைக்கும். இதனை வேள்வியில் சேர்ப்பார்கள். “சோமலதையின் சாறை இந்திரன் பருகட்டும்.

இதுவே நமக்கு நன்மையைத் தரும்” என்பார்கள். முன்னும் பின்னும் சடங்குகளுடன் நிறைவேற்ற வேண்டிய வேள்வியை சுருக்கி, பல்லால் சோமலதையைக் கடித்து சாறு பிழிந்து, இந்திரனுக்குப் படைத்தாள் அபாலா; அவரும் ஏற்றார். மிக எளிமையாக, வேள்வியின் மையப்பகுதியை மட்டுமே செய்து வேள்விப் பயனையே பெற்றாள்! அவசர கால சூழலில், பொது விதிகளுக்கு அப்பால், உயிரினங்களுக்கு பங்கம் ஏதும் வராமல் பாதுகாக்கிறது வேதம். தனது சட்ட திட்டங்களையும் தளர்த்திக் கொள்ளும். இதற்கு அபாலாவின் செயல்பாடு தான் உதாரணம்!

Download As PDF

No comments:

Popular Posts