இளமையின் சின்னம் மகிழ்ச்சி; கொண்டாட்டம் அதன் முகவரி: குதூகலம் அதன் அடையாளம்!
மகிழ்ச்சியுடன் இருக்கிற அனைவருமே இளமையாக இருப்பதாகவே அறியப்படுவார்கள். மகிழ்ச்சியே மானுட வாழ்வின் இலக்கு அதனால்தான் அவலட்சணமாக இருப்பவர்கள் கூட சிரிக்கும் போது அழகாகிவிடுகிறார்கள். உலக அழகிகள் கூட அழும் போது அழுகுணியாகி விடுகிறார்கள்!
ஆன்மிகம் என்பது மகிழ்ச்சியாய் இருப்பதே! ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியையும் பூசிக் கொண்டு, பாதங்கள் பூமி மீது படாதவாறு புன்னகையோடு துள்ளிக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் இறையருள் பெற்றவர்களாக வலம் வருபவர்களே!
நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் இன்புற்றிருக்கும் போது எண்ணங்கள் அனைத்தும் உதிர, மனம் ஒரு நொடி மறைந்து விடுகிறதே... அதுவே தியானம்! அந்தக் கணத்தில் இறைமையைத் தொட்டுவிட்ட உணர்வில் விழிகள் இரண்டும் மின்னுகின்றனவே... அதுவே மெய்ஞ்ஞானம், அதை நீட்டிக்கச் செய்யும் உபாயமே ஆன்மிகம்.
இளமையின் இலக்கணம் இன்புற்றிருத்தலே! இன்புற்றிருக்கும் நொடிகளில், வயோதிபர்கள் கூட இளமையால் வருடப்படுகிறார்கள். 24 மணி நேரமும் இன்புற்றிருக்க முடிபவன் மட்டுமே ஆன்மிகவாதி, அது சத்தியமாகச் சாத்தியமா?” என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிறக்கின்ற கேள்வி.
நமது மகிழ்ச்சி சில நொடிகளுக்குக் கூட நீடிப்பது இல்லையே என்கிற வருத்தம் நமக்கு. பல நேரங்களில் நம் மகிழ்ச்சியைக்கூட வெளியே காட்டிக் கொள்ள பயம். எங்கே அடுத்தவர்கள் வயிறு எரிந்து, அந்த அனலில் நம் அனந்தம் ஆவியாகிவிடுமோ என்கிற அச்சம். ‘இந்த மகிழ்ச்சி நீடிக்குமா’ என்கிற தயக்கம், ‘அடுத்த நொடியே ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ’ என்கிற நடுக்கம்.
இந்தத் தெளிவின்மையின் காரணம் எளிது! நாம் மகிழ்ச்சியாக எண்ணிக்கொண்டிருப்பவையும் வெற்றியாகக் கருதிக் கொண்டிருப்பவையும் உண்மையானவை அல்ல. நமது மகிழ்ச்சி, மற்றவர்களின் இதயங்களிலும் இனிப்புத் தடவ முடிந்தால், அதுவே உண்மையான மகிழ்ச்சி. நமது வெற்றி எப்போது அடுத்தவர்களின் தலையையும் நிமிரச் செய்கிறதோ, அதுதான் உண்மையான வெற்றி!
இளைஞர்களாக இருக்கும் போது ஒவ்வொரு களியாட்டத்துக்குப் பிறகும் சோகம் கவ்விக் கொள்வதற்குக் காரணம் அது நியாயமான இன்பமல்ல என்பதுதான். இரவல் இன்பம் நொடியில் மறையும்! அந்த நிமிடம் மட்டும் புலன்களுக்குப் புத்துணர்வு புகட்டுவது சிற்றின்பம்.
எல்லா நேரமும் நினைந்து நினைந்து இன்புறும் போது, மகிழ்ச்சியை இன்னும் பல மடங்கு பெருகச் செய்வது பேரின்பம். சிற்றின்பம் அடுத்தவர்கள் மூலமாக வருவதால் பழங்களை மொய்க்கும் ஈக்களாக இருந்துவிடுகிறது பேரின்பம்.
உள் மையத்துள் நிகழ்வதால், மாம்பழத்துக்கு உள்ளே இருக்கும் வண்டாக வளர்கிறது. பேரின்ப அதிர்வுகள், அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஆனந்த வட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
மனத்தை உருக்கும் சம்பவம் ஒன்று.
புகைவண்டியில் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அடுத்த நிலையத்தில் இருபது சிப்பாய்கள் ஏறினர். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது, இன்னும் எட்டு மணி நேரம் அவர்கள் பயணிக்க வேண்டும் என்ற தகவல் தெரிந்தது.
நிச்சயமற்ற வாழ்க்கை; ஒவ்வொரு நொடியுமே ஆபத்தை நோக்கிய வாழ்க்கைப் பயணம். நமக்காக, நாட்டைக் காக்கத் துன்பப்படும் அவர்களின் முகங்களைப் பார்த்ததுமே, அவருக்குள் ஈரம் சுரந்தது. இரண்டு மணி நேரம் கழித்து, சாப்பாட்டுக்கு ஆர்டர் எடுப்பவர் வந்தார். நல்ல வெயில் நேரம், அவர்கள் அதற்கு முன்பு எங்கு சாப்பிட்டார்களோ தெரியாது. ஆர்டர் எடுப்பவரிடம், ‘ஒரு சாப்பாடு எவ்வளவு?’ என்று சிப்பாய் ஒருவர் கேட்டார்.
ஒரு சாப்பாடு ஐம்பது ரூபாய் என்று தெரிந்ததும் அந்த ஜவான் நீட்டிய கையை மடக்கிக் கொண்டார். இதைப் பார்த்த நண்பர் உடனே 1000 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து, அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கும்படி சொன்னார்.
அவர்கள் அனைவரும் முதலில் மறுத்தனர். அவர்களை ஒப்புக் கொள்ள வைக்கப் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் அனைவர் முகத்திலும் பசியாறிய திருப்தி!
நண்பர் இறங்க வேண்டிய இடம் வந்தது. பையை எடுத்துக் கொண்டு படிகளை நோக்கிச் சென்றபோது, வேறொருவர் அவரை நோக்கி வந்தார். கனிவுடன் சிரித்தவாறு, “என் பங்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்று 500 ரூபாய் கொடுத்தார். “கருணையோடு முன் வந்து இந்த நல்ல காரியத்தைச் செய்த உங்களுக்கு என் நன்றி” என்று கூறிவிட்டுச் சென்றார். இன்னொருவர் ‘என் பங்கு’ என்று 100 ரூபாய் கொடுத்தார்.
இப்படி நிமிடத்தில் 2,000 ரூபாய் சேர்ந்துவிட்டது. அதையும் அந்தச் சிப்பாய்களிடமே வற்புறுத்திக் கொடுத்துவிட்டுத் திருப்தியுடன் இறங்கினார் அவர். அன்று முழுவதும் அவர் மனம் ஆனந்தத்தில் திளைத்தது. அந்த நொடியோடு கழிந்துவிடுகிற சுகமல்ல அது; வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் மகிழ்ச்சி, ஒரு நல்ல செயல்,
தாடர் சங்கிலியாக மகிழ்ச்சி அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு, ‘உருகிய எண்ணங்கள்’ என்கிற ஆங்கில இதழில் வெளிவந்த இந்தச் சம்பவமே சாட்சி.
பலருக்கும் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. ஆனால், எங்கிருந்து தொடங்குவது, யார் தொடங்குவது என்கிற தயக்கமே தடையாக இருக்கிறது. அடுத்தவர் முன்வந்தால் அவர்கள் ஊக்கத்துக்கு அது விடையாக இருக்கிறது. பலர் அருவியாக இருக்கிறார்கள்; சிலர் மட்டுமே எல்லோருக்கும் தாகம் தணிக்கும் குழாயாக மாறுகிறார்கள்.
அப்படி முன்வருகிறவர்கள் தலைமைப் பண்புகளுடன் திகழ்ந்து, தீப்பந்தம் எரிய ஒரு பொறியாக விளங்குகின்றனர். அவர்களது வாழ்க்கை, அடுத்தவர்களுக்குப் பாடப் புத்தகமாகிறது. நமது எண்ணத்தால் சொல்களால் செயல்களால் ஏற்படுகிற உன்னத உணர்வே உண்மை இன்பம். அப்படிப்பட்டவர்களின் அருகில் இருப்பவர்களும் இன்பமயமாக ஆகிவிடுவார்கள்.
லட்சுமணனிடம் ஸ்ரீராமனின் மாண்பைப்பற்றி, ‘ஒரு பகல் பழகினால், உயிரையும் ஈவரால்’ என்று சீதை குறிப்பிடுவதாகக் கம்பர் எழுதுகிறார். ஒரு முறை ராமனுடன் பழகுபவர்கள், தங்கள் உயிரையும் அவருக்காகத் தருவார்கள் என்பது ராமனுடைய இயல்பு. நம்மோடு பழகியவர்கள் நமக்காக உருகி அன்பு செலுத்துவதே மிகப்பெரிய செயற்பாடு.
பெரும்பாலான சாதனையாளர்களுக்கு நல்ல நண்பர்கள் இருப்பது இல்லை. அதைப் போலவே, மிக அழகாக இருப்பவர்களுக்கு நல்ல தோழிகளும் கிடைப்பதி ல்லை. நண்பர்களுக்காகக்கூட நேரத்தை ஒதுக்க முடியாமல், சுய முன்னேற்றத்திலேயே முழுகிச் சாதனை புரிகிற பலருக்கு, நட்பைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனை ஏதுமில்லை’ என்கிற விஷயம் ஏனோ புரிவதில்லை.
உணவால்- உடையால் வருவது இன்பம், பதவியால் வருவது இன்பம்... புகழால் வருவது மட்டுமே பெருமை.... சொத்தால் வருவது மட்டுமே பாதுகாப்பு என்று நினைக்கிற பலர், அவற்றை அடைந்தும் மனத்தில் இருக்கும் வெறுமையை உணர்ந்து, வறியவர்களாகவே வாழ்கின்றனர். பணக்காரர்கள் பலர் சம்பாதித்ததில் திருப்தி அடைந்திருந்தால், அவர்கள் தொடர்ந்து பொருள் தேடும் முயற்சியை நிறுத்தியிருக்க வேண்டுமே?
மகிழ்ச்சி என்பது தளும்புவதாக இருக்க வேண்டும்; ஒழுகுவதாக இருக்கக்கூடாது.
No comments:
Post a Comment